கவிதாவீதி சந்தர் அவர்களுக்கு.....
வணக்கம் வாத்யாரே..... நேற்றைய எங்கள் பதிவில், சில பின்னூட்டங்களை போட்டு பின் அழித்திருந்தீர்கள். எங்கள் மீது சில குற்றச்சாட்டு வைத்திருந்தீர்கள். உங்களை கண்ணீர் விடவைக்கவேண்டுமென்பதோ....அர்த்தமின்றி காயப்படுத்த வேண்டுமென்பதோ எங்கள் நோக்கமல்ல....எத்தனையோ பேர் இருக்கும்போது என்னை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறீர்கள்? என்ற உங்கள் கேள்வியின் நியாயத்தை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் உங்களை மட்டும் தாக்கவில்லை. நாங்கள் தாக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதற்கு காரணம், நீங்கள் ஒரு ஆசிரியர். தமிழாசிரியரா என்று தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதை மட்டும் நாங்கள் அறிவோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உங்களைப்போன்ற ஆசிரியர்களை மூன்றாம் இடத்தில் வைத்துக்கொண்டாடுகிறது இந்த சமூகம். அப்படிப்பட்ட சமூகத்திற்கு நீங்கள் ஆற்றிய தொண்டு உங்கள் தளம் மூலம் பிழையான வார்த்தைகளை கொடுத்ததுதான்.
யாரோ ஒரு மூன்றாம் மனிதன் இதை செய்தால்கூட மன்னித்துவிடலாம். ஆனால், ஒரு ஆசிரியரே தவறு செய்தால்......அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
எழுத்துப்பிழை என்பது உங்களோடு மட்டும் முடிந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதால் இதே எழுத்துப்பிழைகளோடு மாணவர்களுக்கு நீங்கள் பாடம் எடுப்பதன்மூலம், மாணவர்களுக்கும் அந்த எழுத்துப்பிழை வந்துவிடாதா?
ஒரு தந்தை தவறு செய்தால் அது அந்த குடும்பத்தை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், ஒரு ஆசிரியர் தவறு செய்தால் ஒரு சமூகத்தையே பாதிக்கும்.
எழுத்துப்பிழை இருந்தால் என்ன? நான் சொல்லவந்த கருத்தில் பிழையுள்ளதா என்று பாருங்கள் என்றும் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீர்கள்.
எழுத்தில் பிழையிருந்தால் சொல்லவந்த கருத்திலும் பிழை வந்துவிடும் என்பதை ஏன் ஒரு ஆசிரியரான நீங்கள் உணரமறுக்கிறீர்கள்.
உதாரணத்திற்கு சில...
ஒருவனின் மனைவிக்கு ஒரு அழகான சோலை போன்ற தோட்டம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அந்த சோலைக்குள் இன்னொருவன் நுழைந்துவிட்டான். அந்த சம்பவத்தை ஒருவன் எழுத்தில் கொண்டுவரும்போது, என் மனைவியின் சோலைக்குள் ஒருவன் நுழைந்தான் என்றுதான் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரு எழுத்துதானே மாறுகிறது என்று துணைக்கால் போடாமல் சோலைக்குள் என்பதை சேலைக்குள் என்று எழுதிவிட்டால், குடும்பத்தில் குழப்பம் வந்துவிடாதா?
என் மகன் அடம் செய்கிறான் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் இன்னொருவருக்கு ஒரு தபால் எழுதி அதை தன் மகனிடமே கொடுத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எழுதும்போது வைத்துக்கொள்ளவும் என்பதற்கு பதிலாக வைத்துக்கொல்லவும் என்று பிழையாக எழுதிவிட்டால் முடிந்தது அவரது மகனின் கதை.
எங்கோ மணம் வீசுகிறது என்பதை எழுத்தில் கொண்டு வரும்போது வார்த்தைக்கு நடுவில் இடம் விடாவிட்டால் எங்கோமணம் வீசுகிறது என்ற அர்த்தம் வந்துவிடும். கோமணம் என்பது கிராமப்புறத்தில் வயதானவர்கள் அணியும் உள்ளாடை என்பதை ஒரு ஆசிரியரான உங்களுக்கு இந்த சிறியோன் சொல்லித் தெரியவேண்டியதில்லை.இப்படி எத்தனையோ சொல்லலாம்.
அடுத்த ஒரு பின்னூட்டத்தில் நான் குக்கிராமத்திலிருந்து வந்தவன். எனக்கு பிழையில்லாமல் கவிதை எழுதவராது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
உங்களுக்கு பிழையின்றி கவிதை எழுத வராது என்பதற்காக ஏன் குக்கிராமத்துக்காரர்களை வம்பிழுக்கிறீர்கள்?
பட்டுக்கோட்டையார் பிறந்தது செங்கப்படுத்தான்காடு என்ற குக்கிராமத்தில்தான். கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி என்ற ஊர் தேம்ஸ் நதிக்கரையில் இல்லை. அதுவும் ஒரு குக்கிராமம் தான். வைரமுத்து பிறந்த வடுகப்பட்டியும் ஒரு குக்கிராமம்தான்.
இப்படி குக்கிராமங்களில் பிறந்த எல்லோருக்கும் கவிதை எழுத வரும்போது உங்களுக்கு ஏன் வராது?...முயற்சியுங்கள் அய்யா....முடியும் உங்களால்.
எங்களின் இந்த பதிவிற்கு பதிலடியாக உங்கள் தளத்தில், ஓ...சமூகமே இது நியாயமா? என்று ஒரு கவிதையை நூறு பிழைகளோடு எழுதி பதிவிட்டு அனுதாபம் தேடிக்கொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களிக்கவும் பரிதாபப்படவும் ஒரு கூட்டமே இருக்கிறது.
உங்களுக்காகத்தான் திருவள்ளுவர்
சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
என்று சொல்லியுள்ளார். அதாவது...ஒரு விசயத்தை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லத்தெரிந்தால் போதும். அது பொய்யாக இருந்தாலும் அவனை சுற்றி ஒரு கூட்டமிருந்து, அவனை வெல்ல யாராலும் முடியாது என்றிருக்கிறார். இந்த இடத்தில் ஒரு திருத்தம், உங்கள் விசயத்தில் அது பொய்யாக இருந்தாலும் என்பதை அது பிழையாக இருந்தாலும் என்று மாற்றிக்கொள்ளுங்கள். இனி, உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை. இதுவரை கொடுத்த தொந்தரவிற்காக மன்னிக்கவும்.
இனிமேலாவது பிழையில்லாமல் எழுதுவீர் என்ற நம்பிக்கையில்....
புரட்சிக்காரன்






