Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

வேடந்தாங்கல் தருனுடன் ஒரு சிறப்புப் பேட்டி --காப்பி(பேஸ்ட்) வித் தருன்.....



காப்பி-பேஸ்ட் பதிவுகள் மூலம் தமிழ்மணத்தை கலக்கிக்கொண்டிருக்கும் (அ)சிங்கம் பிரபல பதிவர் வாத்தியார் வேடந்தாங்கல் தருனுடன் ஒரு இனிய சந்திப்பிற்காக நேற்று மாலை மழையையும் பொருட்படுத்தாமல் அவர் நடத்தும் காப்பி ஷாப்பிற்கு சென்றோம். நம்மை இன் முகத்துடன் வரவேற்று கலந்துரையாடினார். அந்த இனிய சந்திப்பின் விவரங்களை நம் வாசகர்களுக்காக தருவதில் மிக்க மகிழ்சியடைகிறோம்.

வாங்க நிருபரே....வாங்க...உட்காருங்க....என்ன சாப்பிடுறீங்க....

பரவாயில்லை....வாத்தியாரே

நம்ம கடைப்பக்கம் வந்துட்டு ஏதாவது சாப்பிடாட்டி என் மனசு கஸ்டப்படும். ஒரு காப்பி சொல்லவா...என் கடை காப்பி ரொம்ப டேஸ்டா இருக்கும்

ரொம்ப கம்பல் பன்னுறீங்களே....சரி..காப்பிலால் வேணாம்...இந்த மழை நேரத்துக்கு சூடா ஒரு கப் டீ குடிச்சா நல்லாருக்கும்.

மன்னித்துக்கொள்ளுங்கள் நிருபரே.....எனக்கு டீ பிடிக்காது ஒன்லி காப்பி தான். என் கடையில காப்பி மட்டும்தான் விற்கறோம்

பரவாயில்லை வாத்தியாரே...காப்பியே கொடுங்க....

(உடனே தன் வேலையாளை அழைத்து இரண்டு கப் காப்பி சொல்கிறார் தருன். காப்பி வந்தது. குடித்துப்பார்த்தால் மிக அருமையாக இருந்தது.)

ஆஹா...என்ன ருசி....வாத்தியாரே என் வாழ்நாளில் இப்படி ஒரு காப்பியை நான் குடித்ததில்லை. அப்படி ஒரு ருசி...இது என்ன காப்பி....இன்ஸ்டண்ட் காப்பியா?

யாருக்குத்தெரியும்  நிருபரே?

என்ன வாத்தியாரே சொல்றீங்க?

நிசமாத்தான் சொல்றேன். நான் இப்ப சொல்லப்போற ரகசியத்தை யாரிடமும் சொல்லிவிடாதீங்க நிருபரே....

சொல்லுங்க...சொல்லுங்க....

இப்ப நீங்க குடிச்சது ஒரே பிராண்டு காப்பி இல்லை. ஒரு ஏழெட்டு கடையில கொஞ்சம் கொஞ்சமா காப்பித்தூள் திருடி அதையெல்லாம் மொத்தமா கலந்து வச்சிருக்கேன். ஆனால், இந்த விஷயம் தெரியாத என் நண்பர்கள் இதை குடிச்சுப்பார்த்துட்டு ஆஹா...அருமை...சூப்பர் டேஸ்டு மச்சின்னு சொல்லி வாழ்த்துவாங்க... இது என் கைப்பக்குவம்ன்னு நினைச்சுக்குவாங்க... நானும் அவங்களோட முட்டாத்தனத்தை பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன். இப்படித்தான் ஒருநாள் எல்லோரும் காப்பிகுடிச்சிட்டு வச்சிட்டுப்போன காப்பி கிளாசை கழுவிட்டு, அந்த கழுவுன தண்ணிய ஒரு பாத்திரத்தில வச்சிருந்தேன். அப்பப்பார்த்து திடீர்னு ஒரு கும்பல் வந்து காப்பி கேட்டாங்க..அத்தனை பேருக்கும் காப்பி கலக்க என்னிடம் சரக்கில்லை. பார்த்தேன் ஆபத்துக்கு பாவமில்லைன்னு நினைச்சு அந்த கிளாஸ் கழுவுன தண்ணில கொஞ்சம் சக்கரை கலந்து சூடுபன்னி கொடுத்திட்டேன். அதை குடிச்ச எல்லோரும் என்னை பாராட்டினாங்க...அதுல ஒருத்தன் காப்பி ரொம்ப டேஸ்டா இருக்கு. இன்னொரு கப் காப்பி கிடைக்குமான்னு கேட்டான். பாவம் அவங்களை சொல்லி குத்தமில்லை. அவங்க இதுக்கு முன்னாடி வேற எங்கேயும் காப்பி சாப்பிட்டிருக்க மாட்டாங்க...

சூப்பர் ஐடியா வாத்தியாரே....ஆமா, இது தப்பில்லையா?

தப்புதான். ஆனால், நம்ம கடை கல்லா கட்டனுமே...என்ன செய்வது?

அது காப்பியில்லை. கப்பு கழுவுன தண்ணின்னு நீங்களாவது சொல்லிருக்கலாம்ல?

சொல்லிருந்தா எல்லோரும் என் மேல வாந்தி எடுத்திட்டு போயிருப்பாங்க... நல்லாருக்குன்னு சொல்ற அவங்க நம்பிக்கையை நான் எதுக்கு கெடுக்கனும்.

 நல்ல ஆளு வாத்தியாரே நீஙக...எனக்கும் காப்பிக்கடை வைக்கிற ஐடியா வந்திருச்சு....அந்த ஃபார்முலாவை சொல்லித்தாங்களே?

அது முடியாது. இந்த காப்பி தயாரிக்கும் காப்பி ரைட் எனக்கு மட்டும்தான் இருக்கு...

விவரமான ஆளு சார் நீங்க...இந்த அனுபவம்தான் பதிவுலகத்திலேயும் உங்களுக்கு கை கொடுக்குது போல...

நிச்சயமா...

உங்களை ஒரு காப்பி பேஸ்ட் மன்னன்னு சொல்றாங்களே...

சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும். கற்பனை திறனும், அறிவும் இருக்கறவங்கதான் இதை சொல்றாங்க...எத்தனை முட்டாள் பதிவர்கள் என்னை கொண்டாடுறாங்க தெரியுமா?

சரி... நீங்க சொந்தமா எழுத முயற்சி பன்னலாமே?

நான் மாட்டேன்னா சொல்றேன். ஆனால், அந்த அளவுக்கு அறிவு வேனுமே? அது எங்கிட்ட இல்லை.... நான் வச்சுக்கா வஞ்சகம் பன்றேன்.. சட்டில இருந்தாத்தானே அகப்பையில வரும். நிருபரே உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் இருக்கவங்கிட்ட புடுங்கி இல்லாதவன்கிட்ட கொடுக்கிறேன்... இதுவும் கம்யூனிசம் தான்.

அப்படி போடுங்க வாத்தியாரே...சரி, நீங்க பதிவு போட்ட கொஞ்ச நேரத்துல சர சரன்னு ஓட்டும் கமெண்டும் வந்துடுதே அது எப்படி? என்ன வசியம் பன்னிருக்கீங்க...

அது பெரிய கம்பசூத்திரமில்லை. காலைல நான் ஒரு பதிவை போட்டுட்டு பின்னாடி ஒரு நூறு பிளாக்குக்கு போயி பதிவையே படிக்காம வந்தேன், பிரசண்ட், அருமை, சூப்பர்ன்னு கமெண்ட் போட்டுட்டு வந்துருவேன். அப்புறம் என் நண்பர் கவிதை தெரு சந்தரிடம் என் யூசர் நேம் பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன். அவரும் என் பெயர்ல போயி ஒரு நூறு கமெண்ட் போட்டுடுவாரு... நான் போட்டது, அவரு போட்டதுன்னு மொத்தம் ஒரு இருனூறு கமெண்டாவது தேறிடும். அதிலேர்ந்து ஒரு அம்பது பேரு வந்து நமக்கு ஓட்டும் பின்னூடமும் போட்டாலே போதும்.

நல்ல சூட்சமமா இருக்கே இது...சரி...படிக்காம அப்படி கமெண்ட் போடறது ரிஸ்காச்சே...அப்படி கமெண்ட் போடும்போது ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம்  நிகழ்ந்திருக்கா?

அய்யோ...அய்யோ...அந்த கூத்தை ஏன் கேக்கறீங்க....ஒரு தடவை இப்படித்தான் ஒரு பதிவுக்கு போயி வழக்கம்போல பதிவையே படிக்காம ஆஹா...அருமையான பதிவு.. நல்ல நகைச்சுவை....சிரிச்சிக்கிட்டே இருக்கேன்ன்னு ஒரு கமெண்ட போட்டுட்டு வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல ஒரு போன் வந்தது எடுத்து பேசினால் கண்டபடி பச்சை பச்சையா திட்டுறான் ஒருத்தன். எனக்கு ஒன்னுமே புரியல...அப்புறம் தான் கேட்டேன் எதுக்கு இப்படி நாரத்தனமா திட்டுறீங்கன்னு...அதுக்கு அவன் சொன்னான்...உன்னை திட்டாம கொஞ்சவா முடியும் நாதாரிப்பயலே...என் பொண்டாட்டி இன்னொருத்தனோட ஒடிப்போயிட்டான்னு  நானே கவலைப்பட்டு ஒரு பதிவை போட்டா அது உனக்கு நகைச்சுவையான பதிவாடா...இன்னும் சிரிச்சுக்கே இருக்கியா? இரு வந்து உன் பல்ல பேக்கறேன்னு சொன்னான். அதுபோல இன்னொரு முறை இப்படித்தான் ஒரு பதிவுக்கு போயி படிக்காம பகிர்வுக்கு நன்றி நண்பரே...வாழ்த்துக்கள்ன்னு ஒரு கமெண்டு போட்டேன். அப்புறம் பார்த்தா அது ஒரு மரண அஞ்சலி பதிவு...இப்படி நிறைய இருக்கு.

நல்லாத்தான் இருக்கு...சரி இப்பத்தான் பிலாக் ஆரம்பிச்சமாதிரி இருக்கு அதுக்குள்ள எப்படி இத்தனை பாலோவரு உங்களுக்கு?

நல்லா கேட்டீங்க போங்க...ரொம்ப சுலபமா சொல்லிட்டிங்க இதுக்கு நான் எவ்வளவு கஸ்டப்பட்டேன் தெரியுமா? இந்த ஐனூத்தி சொச்சம் பாலோவர சேர்க்க நான் ஒரு ரெண்டாயிறம் பிலாக்கிலாவது பாலோவரா சேர்ந்திருக்கேன். மொய்யிக்கு மொய்யி மாதிரி வந்த ஆளுங்க இவங்க

அப்படினா இது தானா சேர்ந்தகூட்டமில்லை... நீங்களா சேர்த்த கூட்டம்ன்னு சொல்லுங்க....

அப்படித்தான் வச்சுக்கங்க....

இன்னொரு கேள்வி....அதெப்படி கரெக்டா ஹிட்டடிக்கும் பதிவை மட்டும் கண்டுபிடிச்சு காப்பியடிக்கறீங்க?

அது ரொம்ப சிம்பிள். ஒருத்தரோட பதிவை படிக்கும்போதே இது ஹிட்டடிக்கும், இது அடிக்காதுன்னு கணிச்சுடுவேன். அப்படி ஹிட்டடிக்கும் பதிவை உடனே சுட்டு என் பெயர்ல போட்டுடுவேன். நான் நினைச்சது மாதிரியே ஹிட்டாகிடும்

நீங்க காப்பியடிச்சதை யாராவது கண்டுபிடிச்சு...லிங்கோட சுட்டிக்காட்டினா என்ன பன்னுவீங்க வாத்தியாரே?

உடனே என் பிலாக்கில் போட்ட அந்த காப்பி பேஸ்ட் பதிவ நீக்கிடுவேன். அல்லது பதிவுல இருக்க வார்த்தைகளை மாற்றிடுவேன். தட்ஸ் தமிழ்...

தட்ஸ் தமிழா?

மன்னிச்சுக்கங்க நிருபரே...தட்ஸ் ஆல்ன்னு சொல்லவேண்டியதைத்தான் தட்ஸ் தமிழ்ன்னு சொல்லிட்டேன்.

உங்களுக்கு எப்போதும் தட்ஸ் தமிழ் நினைப்புதான்....

வேற என்ன செய்வது தட்ஸ் தமிழ்ல இருந்துதானே அதிகம் காப்பி அடிக்கிறேன்.

உங்க எதிர்கால லட்சியமென்ன வாத்தியாரே?

லட்சியம்ன்னா....(யோசிக்கிறார்)....எதிர்காலத்தில நம்பர் ஒன் காப்பி பேஸ்ட் பதிவருன்னு பெயர் வாங்கனும். சரி...வந்து நேரமாச்சே...இன்னொரு காப்பி சாப்பிடுறீங்களா?

வேனாம் சார்...ஒன்னே போதும்...

என்ன நிருபரே நீங்க ஒரு காப்பி குடிச்சதுக்கே இப்படி அலுத்துக்கறீங்க... நானெல்லாம் ஒரு நாளைக்கு மூனு, நாலு காப்பியெல்லாம் அடிப்பேன் சே...குடிப்பேன் தெரியுமா?

உங்களுக்கு அது பழக்கமாபோயிருச்சு....

அடிமையாகிட்டேன்னு கூட சொல்லலாம்....அப்படி மூனு நாலு காப்பி குடிக்காட்டி கை காலெல்லாம் உதற ஆரம்பித்து விடும்.

வேற எதாவது திட்டம் இருக்கா?

இப்ப என் பதிவுக்கு வர ஹிட்டு கொஞ்சம் குறைஞ்சு போச்சு...அதான் எதிர்காலத்துல மஜா மல்லிகா போன்ற செக்ஸ் கதைகளை காப்பியடிச்சு போடலாம்ன்னு இருக்கேன். அப்ப நிறைய பேருங்க வருவாங்கல்ல....

இன்னொரு முக்கியமான கேள்வி. வேடந்தாங்கல்ங்கற பேரை எப்படி செலக்ட் செஞ்சீங்க?

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம் பல நாட்டுலேர்ந்துதானே வருது. அதுபோல என் பிலாக்கில் இருக்கும் பதிவுகளும் பல தளத்திலிருந்துதான் நான் சுட்டு போடறேன். அதான் அந்தப்பேர வச்சேன்.

சூப்பர்  சார்.... நம்ம வாசகர்களுக்காக ஏதாவது  சொல்லுங்களேன்...

எதாவது என்ன? ஒரு கவிதையே சொல்லுறேன்....

காப்பி பேஸ்ட் என்றார்கள்
திருடன் என்றார்கள்
அதெயெல்லாம் பற்றி
கவலைப்படாமல்
நக்கீரனிடமிருந்து திருடி
ஒரு பதிவிட்டேன்
மகுடமும் கிடைத்தது.

ஆனாலும், அதை
ஒருத்தன் கண்டுபிடித்து
என்னை திட்டினான்
அவன் ஒருவன் தானே
கண்டு பிடித்தான்
மற்றவர்கள் கண்டுபிடித்து
என்னை காறி துப்பும் முன்
உடனே அந்தப்பதிவை
நீக்கிவிட்டேன்.

கொஞ்ச நாளுக்கு பின்
நீக்கிய பதிவை
மீண்டும்சேர்த்து
எண்ணிக்கையை
கூட்டிக்கொண்டேன்.

இப்படி நான்
காப்பியடிப்பதையெல்லாம்
கண்டுபிடித்துக்கொண்டு
இருந்தால் எப்படித்தான்
நான் பிழைப்பை
ஓட்டுவது? 

 நல்லாருக்கா என் கவிதை?

என்னது கவிதையா? இன்னும் நீங்க சொல்லவே ஆரம்பிக்கவில்லையே?

அப்படின்னா இப்ப சொன்னது என்னன்னு நினைச்சீங்க? உங்களுக்கு எங்கே தெரியப்போகுது என் கவிதையின் அருமை. இப்ப நான் சொன்னதை ஒரு பதிவாக போட்டிருந்தாலே இந்நேரம் தமிழ் மணத்தில் ஏழு வோட்டு வாங்கிருப்பேன். ஆஹா...சூப்பரு...கலக்கல்... நச் கவிதைன்னு ஒரு பத்து கமெண்டு வந்திருக்கும். கொஞ்ச நேரத்துல சூடான இடுகைகளில் வந்திருக்கும்.

வாத்தியார் லேசாக சூடானார். இதற்கு மேல் நாம் அங்கிருந்தால் நம் தலையில் காப்பியை ஊற்றிவிடுவார் என்று பயந்துபோய் வெளியேறினேன்.





பதிவர்களை வாழ வையுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....



தமிழ்மணம் டாப்-20 வந்ததிலிருந்து பதிவர்களுக்குள் ஒரு போட்டியே உருவாகிவிட்டது. எப்படியாவது முதல் இருபது இடங்களை பிடித்துவிடவேண்டும் என்று நிறைய பதிவர்கள் ஒரு நாளைக்கு ரெண்டு ,மூணு,நாலு பதிவுகளை போட்டு ஹிட்சை உயர்த்திக்கொள்கிறார்கள். ஆனால் அத்தனையும் சொந்தமாக யோசித்ததா என்றால் அதுதான் கிடையாது. எல்லாம் காப்பி பதிவுகள்.முன்னணி இதழ்களில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் காப்பி அடிக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் முன்னணிக்கு வந்து விடுகிறார்கள். வாரந்தோறும் முன்னணிக்கு வரும் இருபது பதிவர்களை பார்த்தால்....சொந்தமாக எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காப்பியடிக்கும் பதிவர்களே முக்கால் சதவீதம் டாப் 20-ஐ ஆக்கிரமித்துக்கொள்கிரார்கள். நியாயமாக மூளையை கசக்கி எழுதும் பதிவர்கள் இதனால் சோர்ந்து போகிறார்கள் என்றால் மிகையில்லை.

பரபரப்பான தலைப்புக்கள், 18 + தலைப்புக்கள் வைக்கும் பதிவர்களின் பதிவுகளை சூடான இடுகையில் காட்டமாட்டோம் என்று தமிழ்மணம் நிர்வாகம்  முடிவு எடுத்திருப்பதாக பதிவுலக ஜாம்பவான் மங்குனி அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

அதேபோல....தொடர்ந்து காப்பியடிக்கும் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு எச்சரிக்கை கொடுத்து தமிழ் மனத்திலிருந்து நீக்க வேண்டும். அதையும் மீறி காப்பி செய்து வெளியிட்டால் அவர்களின் வலைதளத்தையும் நிரந்தரமாக நீக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் நியாயமாக எழுதும் பதிவர்களின் பதிவுகளும் முன்னணிக்கு வரும். குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வேண்டிய இவர்களின் திறமை, குடத்திலிட்ட விளக்காய் மாறிவிட்டதிலிருந்து இவர்களை காப்பாற்றலாம். செய்யுமா தமிழ்மணம் நிர்வாகம்?





Powered by Blogger